காதியின் வேலைவாய்ப்பு சாதனை

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி) 2021-22 நிதியாண்டில் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி, முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. கே.வி.ஐ.சி கடந்த நிதியாண்டில் 1,03,219 புதிய யூனிட்களை ரூ. 12,000 கோடி மூலதனத்தில் நிறுவியுள்ளது. 2008ம் ஆண்டு பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும்  திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இவ்வளவு புதிய யூனிட்டுகள் நிறுவப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. இந்த புதிய உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளை நிறுவியதன் வாயிலாக 8.25 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை கே.வி.ஐ.சி உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கடந்த நிதியாண்டில், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் முதன்மையான அமைப்பாக உருவெடுத்துள்ளது காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம்.