சன்ஸ்கார் பாரதி கோரிக்கை

சன்ஸ்கார் பாரதியின் அகில பாரத பிரபந்தகாரிணி குழு கூட்டத்தில், ‘கொரோனா உலகளாவிய பொதுமுடக்கத்தால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கடினமான சூழ்நிலைகள் தொடர்ந்தன. மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க அனைத்து மேடை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் உள்ளூர் நாட்டுப்புறக் கலைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் முக்கிய வருமானமே மேடை நிகழ்ச்சிகளால்தான் கிடைக்கிறது. எனவே, நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும்.  கலைச் செயல்பாடுகள் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு வருவதற்கும், கலைஞர்கள் மீண்டும் கலையின் மூலம் தேசத்தை வணங்குவதற்கும் அர்த்தமுள்ள முயற்சிகள் தேவை. வருடாந்திர உள்ளூர் திருவிழா ஏற்பாடுகள் முன்பு போலவே தொடங்கப்பட வேண்டும். கைவினைக் கலைஞர்கள், பழங்குடியினக் கலைஞர்கள் போன்றோர், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்குபெற நடவடிக்கை தேவை. நீண்டகாலமாக நிலுவையில் உள்ள உதவித்தொகை, பெல்லோஷிப்கள், விருதுகள், கௌரவங்கள், அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகள், ஓய்வூதியங்கள், கலை மாணவர்களுக்கான பயிலரங்குகள் போன்றவற்றை மத்திய மாநில அரசுகள் மீண்டும் தொடங்க வேண்டும். நாடு சுதந்திரமடைந்த 75வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் அது கலைஞர்களுக்கு புதிய வாழ்க்கையை ஊக்குவிக்கும் ஒரு சந்தர்ப்பமாக மாற வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.