நாட்டில் பல மாநிலங்களில் கலவரம் மற்றும் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தீவிர முஸ்லிம் அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவை (பி.எப்.ஐ) தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களில் செய்திகள் வந்தன. இந்த அமைப்பு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு போதுமான ஆதாரம் உள்துறை அமைச்சகத்திடம் இருப்பதாகவும், இந்த தடை குறித்து மத்திய அரசு அடுத்த வாரம் முடிவெடுக்கும் என தகவல்கள் வெளியாகின. பி.எப்.ஐ அமைப்பு பல்வேறு சமூக விரோத மற்றும் தேச விரோத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகம் தெரிவித்தும் அதன் மீதுள்ள பல வழக்குகளை சுட்டிக்காட்டியும் அதன் மீது தடைவிதிக்க சில ஹிந்து அமைப்புகளும், மாநில அரசுகளும்கூட மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. முன்னதாக, 2021 ஏப்ரலில் உச்ச நீதிமன்றத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பி.எப்.ஐ அமைப்பைஐ தடை செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார் என்பது நினைவுகூரத்தக்கது. இந்நிலையில், உள்துறை அமைச்சகம், பி.எப்.ஐ மீதான தடை குறித்து முடிவு செய்ய அத்தகைய கூட்டம் எதுவும் நடைபெறவில்லை என தெளிவுபடுத்தியுள்ளது.