நீதிபோதனை, கலாச்சாரம் அவசியம்

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக தருமபுர ஆதீனத்தின் யாத்திரையை துவக்கி வைக்க தமிழக ஆளுநர் ரவி, தருமபுர ஆதீனம் சென்றார். ஆளுநருக்கு பா.ஜ.க மாநில துணைத்தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் வரவேற்பளித்தனர். தருமபுரம் ஆதீனத்தில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தருமபுர ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்துவைத்த ஆளுனர், தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளுடன் அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். குருமகாசன்னிதானம், ‘தருமபுர ஆதீன அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 800 மாணவர்கள் பயிலும் முதல் பள்ளியாக உள்ளது. பசுக்களைப் பராமரிக்க வேண்டும். கால்நடைகளை சரியாக பராமரிக்காததால் கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால் தான் பண்பாடு, கலாச்சார சீர் கெட்டுள்ளது. கல்வி நிலையங்களில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை தொடங்க வேண்டும்’ என கூறினார். தொடர்ந்து பேசிய ஆளுநர், ‘பாரதம் நாடு வளமான நாடு. தருமபுர ஆதீனம் நாட்டு மக்களுக்கும் நாட்டிற்கும் மக்களுக்கும் பல்வேறு சேவைகளை ஆற்றி வருகிறது. குறிப்பாக, கொரோனா, கார்கில் போர் போன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் தாமாக முன்வந்து பல்வேறு உதவிகளை செய்தது. பாரதத்தின் வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, அது கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை உள்ளடக்கியது. பாரதத்தின் ஆன்மீகம் தமிழகத்திலிருந்து தொடங்கப்பட்டது. உலகில் மக்கள் இயற்கை இடர்பாடுகள், சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் இதற்குத் தீர்வு நாகரீகம், கலாச்சாரம், கல்வி, நீதி போதனைகள், பண்பாடு உள்ளிட்டவைதான். மதத்தால் மொழியால் உணவால் நாம் பிரிந்திருந்தாலும் அனைவரும் ஒரே குடும்பம்’ என பேசினார்.