உத்தரப் பிரதேசம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோயிலில் இரவு நேரத்தில் ஒரு இளைஞர் உள்ளே செல்ல முயன்றார். அங்கு வழக்கமான பாதுகாப்பு சோதனைக்காக காவலர்களால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அப்போது அந்த நபர், காவலர்களின் ஆயுதங்களைப் பறிக்க முயன்றார். ஆனால் அது முடியாததால் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை வெளியில் எடுத்து காவல்துறையினரைத் தாக்கினார். இதில் இரண்டு காவலர்கள் படுகாயம் அடைந்தனர். அதன்பிறகு, ‘அல்லாஹ்-ஹு-அக்பர்’ என்று கத்திக் கொண்டே கோயிலின் பிரதான வாயிலை நெருங்கினார். அங்கிருந்த பக்தர்கள் பலர் கோயில் அருகே திரண்டு அவரை தடுக்க முயன்றனர். பின்னர் அவர் காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோரக்நாத் கோவிலின் தலைமை பூஜாரி என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையில், அந்த நபர் கோராக்பூரைச் சேர்ந்த அகமது முர்தாசா அப்பாசி என்ற முஸ்லிம் இளைஞர் என்பதும் அவர், மும்பையில் ஐ.ஐ.டி கல்வியை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து அதனையும் விட்டுவிட்டதாக தெரியவந்துள்ளது. தனது மகனின் மனநலம் சரியில்லை என அவரின் தந்தை தன் மகனை கப்பாற்றும் விதமாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
அகமது முர்தாசா அப்பாசியை 7 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுவரை நடைபெற்ற விசாரணையில், அவர் ஜாகிர் நாயக்கின் அமைப்பு, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததும், மும்பை, ஜாம்நகர், கோயம்புத்தூர், நேபாளம் ஆகிய பல இடங்களுக்கு அடிக்கடி பயணித்ததும் தெரியவந்துள்ளது. அவர் பலமுறை கோயிலை நோட்டமிட்டுள்ளார். குறிப்பாக முதல்வர் யோகி ஆதித்தியநாத் கோயிலுக்குச் செல்ல பயன்படுத்தும் கேட் எண் 3ஐ பலமுறை நோட்டமிட்டுள்ளார். அவரை பல மர்ம நபர்கள் அடிக்கடி வந்து சந்தித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பாசியுடன் மற்றொரு நபரும் வந்திருக்கலாம் என்றும் அப்பாசி காவலர்களிடம் சிக்கியபோது மற்றொரு நபர் தப்பியோடி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.