பள்ளியில் பகவத் கீதை

பாஜக ஆளும் மாநிலங்கள், தங்கள் பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் பகவத் கீதையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள நிலையில், ஹிமாச்சலப் பிரதேச அரசு இந்த முடிவைச் சமீபத்தில் அமல்படுத்தியுள்ளது. வரும் கல்வியாண்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ பாடமாக கற்பிக்கப்படும் என்று மாநில கல்வி அமைச்சர் கோவிந்த் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். பதாரில் நடந்த ‘ஜன் மஞ்ச்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தாக்கூர், ‘மாணவர்களின் கலாச்சார அறிவு அவர்களுக்கு தார்மீக பலத்தை அளிக்கும். சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் கீதை பள்ளிகளில் கற்பிக்கப்படும்’ என்றார். மேலும், ஹிமாச்சல பிரதேச அரசும் 3ம் வகுப்பு முதல் சமஸ்கிருதத்தை அறிமுகப்படுத்தவும் முடிவு செய்துள்ளது.  முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் குஜராத் அரசு, நம்முடைய பெருமைக்குரிய மரபுகளுடன் தொடர்பை வளர்ப்பதற்காக 6 முதல் 12ம் வகுப்புகளுக்கான பள்ளி பாடத்திட்டத்தில் ஸ்ரீமத் பகவத் கீதையை அறிமுகப்படுத்துவதாக அறிவித்திருந்தது. இதேபோன்ற முடிவை ஹரியானா அரசும் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது. பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை அறிமுகப்படுத்த கர்நாடகாவும் ஆலோசித்து வருகிறது.