புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு, உக்ரைன் ரஷ்ய போரால் பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்ற பாதிப்புகளால் மக்கள் அனைவரும் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழக அரசு சொத்து வரியை அபரிமிதமாக உயர்த்தியுள்ளது. மத்திய அரசின் 15வது நிதிக்குழு அறிக்கை அடிப்படையிலேயே வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது பழி சுமத்தி அமைச்சர் நேரு தப்பிக்கப் பார்க்கிறார். மத்திய அரசின், 15வது நிதிக்குழு எப்போது இந்த அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பியது? 100 முதல் 200 சதவீதம் வரியை உயர்த்த வேண்டும் என மத்திய அரசின் நிதி கமிஷன் சொல்லியிருக்கிறதா? மக்களிடம் கருத்து கேட்காமல் ஏன் அவசரமாக சொத்து வரி உயர்த்தப்பட்டது? இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஏழை எளிய நடுத்தர மக்கள் தலையில் பாறாங்கல்லுக்கு சமமான வரி உயர்வை சுமத்துவது சரியல்ல. சொத்து வரி உயர்வு அரசாணையை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.