சேவா பாரதி அமைப்பு கடந்த ஆண்டு தனது ‘தன்வந்திரி’ மருத்துவ சேவை யாத்திரை மூலம் தேசத்தின் வடகிழக்குப் பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சேவை செய்துள்ளது. தன்வந்திரி மருத்துவ சேவை யாத்திரையின் கீழ் கடந்த ஆண்டு 145 மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மருத்துவ முகாம்களில் 124 மூத்த ஆயுர்வேத பயிற்சியாளர்கள் மற்றும் 116 ஆயுர்வேத மாணவர்களும் கலந்து கொண்டனர். தன்வந்திரி மருத்துவ சேவை யாத்திரையின் நிறைவு விழா சமீபத்தில் அசாம் தலைநகர் கௌஹாத்தியில் உள்ள அடிங்கிரியில் நடைபெற்றது. அசாம் சுகாதாரத்துறை அமைச்சர் கேசப் மஹந்தா, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுரேஷ் சோனி, ஆர்.எஸ்.எஸ் அசாம் ஷேத்ர பிரசாரக் உல்லாஸ் குல்கர்னி, மருத்துவ அமைப்பின் தேசிய செயலாளர் டாக்டர் பிஸ்வம்பர் சிங், என்.சி.பி.சி.ஆர் தேசிய இயக்குநர் கனுங்கு தேவ், கௌஹாத்தி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் அச்யுத் பைஷ்யா உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர். இதனையடுத்து, வித்யா பாரதியின் பன்முகக் கல்வித் திட்டமான ‘அமிர்த பவனின்’ தலைமை அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றிய சுரேஷ் சோனி, ‘குழந்தைகளுக்கு முதல் பள்ளி வீடு, தாய் தான் குழந்தையின் முதல் ஆசிரியர். தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பதாகும். கல்வியின் மொத்தத்தை கருத்தில் கொண்டு, பாரத அறிவு மரபின் அடிப்படையில் நாம் சிந்திக்க வேண்டும்’ என்று கூறினார்.