கேரள அரசை சாடிய வி.ஹெச்.பி

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) உறுப்பினர்களுக்கு கேரள மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் அளித்த பயிற்சி குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே, கேரள அரசைக் கண்டித்துள்ளார். இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மிலிந்த் பரண்டே, “ஒரு அரசு நிறுவனமான தீயணைப்பு படை, பி.எப்.ஐ சீருடையில் உள்ள பி.எப்.ஐ உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. இது சமூகத்திற்கு தவறான சமிக்ஞையை அனுப்புகிறது. பல வன்முறை செயல்கள் நடவடிக்கைகள் காரணமாக பி.எப்.ஐ அமைப்பை தடை செய்ய பல மாநில அரசாங்கங்கள் பரிசீலித்து வருகின்றன. அரசாங்க நிறுவனம் ஒன்று இது போன்ற அமைப்புகளுக்கு பயிற்சி அளிக்கும் போது, ​​இது முஸ்லீம்களுடன் அரசு சமாதானமாக செல்லும் முயற்சிகளுக்கு ஒரு மோசமான உதாரணம். இது பயங்கரவாத நடவடிக்கைகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊக்குவிப்பதாகும். இது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை கேரள அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கேரளாவில் ஹிந்து சமூக மக்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார்கள். கேரளாவில் மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். இங்கு வாழும் ஹிந்துக்கள், முஸ்லிம் சமூகத்தின் ஒரு பிரிவினராலும், கிறிஸ்தவ மிஷனரிகளாலும் குறி வைக்கப்படுகிறார்கள். கவர்ச்சி, மோசடி அல்லது பலத்தைப் பயன்படுத்தி மதமாற்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இவை அரசியலமைப்பிற்கு எதிரானவை, சட்டவிரோதமானவை. இதில் ஹிந்து சிறுமிகள் கடத்தல் மற்றும் லவ் ஜிகாத் ஆகியவையும் அடங்கும். மாநிலத்தில் உள்ள கிறிஸ்தவ சமூகம் கூட இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளது. சில மாநில அரசுகள் மதமாற்றத் தடைச் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளன. இது ஒரு தேசிய பிரச்சனை. எனவே, மத்திய அரசும் இதற்கு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறோம். இந்தச் சட்டத்தில் வலுக்கட்டாயமாக கடத்தல், அல்லது வசீகரம் மூலம் மதமாற்றம், ஹிந்து சிறுமிகளை ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளும் சேர்க்கப்பட வேண்டும்” என கூறினார்.