நவ்ரே எனப்படும் நவராத்திரி காஷ்மீரி பண்டிட்டுகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். இது அவர்களின் புத்தாண்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது. கஷ்மீர் முஸ்லிம்கள் 1990களில் நிகழ்த்திய கோர வன்முறைகளைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து அகதிகளாக வெளியேறிய அவர்கள், தற்போது மீண்டும் தங்கள் தாய் மண்ணுக்குத் திரும்பத் துவங்கியுள்ளனர். இந்நிலையில், காஷ்மீரி பண்டிட்டுகளின் அமைப்பு, வோமேத், ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஜபர்வான் பூங்காவில் சமூகத்தின் முக்கிய திருவிழாவான நவ்ரேவை 32 ஆண்டுகளுக்குப் பிறகு விமர்சையாகக் கொண்டாடியது. அங்கு காஷ்மீரி பண்டிட்டுகள் பற்றிய கண்காட்சியும் வைக்கப்பட்டிருந்தது. ‘காஷ்மீர் நவ்ரே மிலன் 2022’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், காஷ்மீர் ஆணையர் பி.கே போல், காஷ்மீரி முஸ்லிம்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தனியார் பள்ளிகள் சங்கம் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி நடத்தியது. பாரம்பரிய காஷ்மீரி பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. செய்தியாளர்களிடம் பேசிய பி.கே. போல், ‘காஷ்மீர் பண்டிட்டுகளின் கலாச்சாரத்தை புதிய தலைமுறைக்கு எடுத்துரைப்பதே அமைப்பாளர்களின் முக்கிய நோக்கம். பல காஷ்மீரி பண்டிட்டுகள் உடைந்த தங்கள் வீடுகளை மீண்டும் கட்டத் தொடங்கியுள்ளனர். பலர் பள்ளத்தாக்கில் வசிக்க மீண்டும் வருவார்கள்’ என்று கூறினார்.