டெல்லி சாணக்யபுரியில் சோனியா காந்தியின் செயலாளர் வின்சென்ட் ஜார்ஜ் ஆக்கிரமித்துள்ள லுடியன்ஸ் பங்களா பகுதியில் உள்ள குடியிருப்பை காலி செய்யுமாறு காங்கிரஸ் கட்சிக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வீட்டுவசதி மற்றும்டெல்லி நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் ஒரு பகுதியான எஸ்டேட்ஸ் இயக்குநரகம், மார்ச் 25ல் அனுப்பியுள்ள வெளியேற்ற நோட்டீசில், இந்த பங்களா, அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஜார்ஜ் சாணக்யபுரியில் வசிக்கவில்லை என்றாலும், அந்த பங்களா இன்னும் காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்த பங்களாவுக்கு கடைசியாக 2013ல்தான் வாடகை செலுத்தப்பட்டது. இதன் மொத்த வாடகை பாக்கி ரூ. 3.08 கோடி. இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க காங்கிரஸ் கட்சிக்கு மூன்று நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 2013 ஜூன் மாதம் இந்த இடத்திற்கான ஒதுக்கீட்டை இயக்குனரகம் ரத்து செய்தது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக தரவுகளின்படி, சோனியா காந்தி தங்கியுள்ள 10, ஜன்பத் சாலை வீட்டிற்கு நிலுவைத் தொகை கடைசியாக செப்டம்பர் 2020ல் செலுத்தப்பட்டது. அதற்கான மாத வாடகை ரூ. 4610 மட்டுமே. 26, அக்பர் ரோட்டில் உள்ள காங்கிரஸ் சேவாதள் அலுவலக பங்களாவின் வாடகை 2012 டிசம்பர் முதல் செலுத்தப்படவில்லை. அதன் வாடகை பாக்கி ரூ. 12 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.