சென்னை, அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு சரிந்து விழுந்தது. இதில், பெண் ஒருவர் காயம் அடைந்தார். அவ்வழியாக சென்ற ஒருவரின் சட்டையும் கிழிந்தது. அதிர்ஷ்டவசமாக யாருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை. காற்றின் காரணமாக அலங்கார வளைவு சரிந்து விழுந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். முறையாக அலங்கார வளைவை நிறுவாமல் விபத்தை ஏற்படுத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் தனக்கு யாரும் பேனர், கட்அவுட் வைக்ககூடாது, பேனர் கலாச்சாரத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என செப்டம்பர் 2019, ஆகஸ்ட் 2021 என இருமுறை கூறியுள்ளார். இந்த இருமுறையும் தமிழகத்தில் பெருகியுள்ள பேனர் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற இளம் பெண்ணும், கொடிக்கம்பம் நட்ட தினேஷ் என்ற 8ம் வகுப்பு மாணவனும் உயிரிழந்தனர். சென்னை உயர் நீதிமன்றமும் பேனர் கலாச்சாரத்தை தடுக்கத் தவறிய தமிழக அரசையும் அரசு அதிகாரிகளையும் கண்டித்துள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாக இன்றுவரை அந்த பேனர் கலாச்சாரம் தொடர்ந்து கொண்டுத்தான் உள்ளது.
இந்த சம்பவங்கள், ஒருவேளை முதல்வர் தனக்கு பேனர், அலங்கார வளைவுகள் வைப்பதை ரசித்து மறைமுகமாக இந்த கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகிறாரா அல்லது அவரின் பேச்சை சொந்த கட்சியினரே கேட்பதில்லையா? என்ற சந்தேகத்தை மக்கள் மனத்தில் விதைத்துள்ளது. சொந்த கட்சியினரே அவரின் பேச்சை கேட்கவில்லையெனில் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என யார் அவரின் பேச்சை கேட்பார்கள்? கட்சியே அவரது கட்டுப்பாட்டில் இல்லதபோது ஆட்சி எப்படி அவர் கட்டுப்பாட்டில் இருக்கும்? இதனை ஸ்டாலின் சிந்திக்க வேண்டும். கட்சியினர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்.