ஹிந்து மதத்தினருக்கு சிறுபான்மை அந்தஸ்து

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு ஒன்றில், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஹிந்துக்கள் மற்ற மதத்தினரை விட குறைவாக வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மாநிலங்களில் பெரும்பான்மையாக வசிக்கும் மதத்தினர் தேசிய அளவில் சிறுபான்மை என்ற அந்தஸ்துடன் சலுகைகளை அனுபவிப்பதாகவும் அங்கு சிறுபான்மையாக உள்ள ஹிந்துக்களுக்கு சிறுபான்மையினருக்கான எந்த சலுகையும் கிடைப்பதில்லை எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு, ஹிந்து மத மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அவர்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் பொதுப்பட்டியலில் இருப்பதாக கூறியுள்ள மத்திய அரசு, மத அடிப்படையிலோ, மொழி அடிப்படையிலோ சிறுபான்மை தகுதி வழங்க மாநில அரசுகளும் முடிவெடுக்கலாம் என தெளிவுபடுத்தியுள்ளது. உதாரணமாக கர்நாடக மாநிலத்தில் தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம், மராத்தி உள்ளிட்டவற்றை சிறுபான்மை மொழிகளாக கருதி அதற்குரிய சலுகைகளை அம்மாநில அரசு வழங்கிவருவதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.