பா.ஜ.க போராட்டம்

தமிழக ப.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முழுமையாக செயல்படுத்தினாலே உன்னதமான தமிழ்நாடு கண்முன்னே உருவாகும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்களை மூடிக்கொண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் கடன் 6.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கல்விக்கடன் ரத்து, நகைக்கடன் ரத்து, குடும்ப பெண்களுக்கு ரூ.1000, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, சமையல் கேஸ் விலை குறைப்பு, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய முறை என அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத பட்ஜெட் இது. ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ரத்து, மக்களை குடிக்க வைத்து வருவாய் ஈட்டுவது போன்றவற்றால் உன்னத பட்ஜெட்டாக ஸ்டாலின் பார்க்கிறாரா? என கேட்டுள்ளார். மேலும், பட்ஜெட்டில் மத்திய அரசின் பல திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தி.மு.க அரசை விமர்சித்துள்ள அவர், பெட்ரோல், டீசல் வருவாய் குறித்து பொய் சொன்ன தமிழக நிதியமைச்சர், 23,000 கோடி வருவாய் வந்ததை ஒப்புக்கொண்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி ஆதாரங்களை உருவாக்காமல், பெருக்காமல் மூலதனச் செலவுகளை குறைத்து பற்றாக்குறையை குறைத்து காட்டி ஏமாற்றும் தி.மு.க அரசின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ள அண்ணாமலை, விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்திட உருப்படியான ஒரு அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என்று சாடியுள்ளார். எனவே, தமிழக அரசைக் கண்டித்து மார்ச் 25 காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கோரியுள்ளார்.