தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஈரோடு, பவானி, கரூர் மாவட்ட பகுதிகளில் நதி நீர் பாசனம், நீர்ப்பாசன சபையால் பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் நீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ. 900 கோடி ஒதுக்கி உள்ளது. இந்த தொகை, பாசன சபைகளால் வாய்க்கால் வெட்டவும், பராமரிக்கவும், மராமத்து பணிகளை மேற்கொள்ளவும் செலவு செய்யப்படும். மத்திய அரசின் இந்த நிதி கிடைத்தவுடன், நதி நீர்ப்பாசன மகா சபைகளை கைப்பற்ற தி.மு.கவினர் சதி செய்துள்ளனர். இதற்காக, மார்ச், 14ல் திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அவசர அவசரமாக கீழ்பவானி நீர்ப்பாசன சபைகளுக்கு தேர்தல் நடத்தியுள்ளனர். தி.மு.கவினரின் வேட்புமனுக்களை மட்டும் ஏற்றுக்கொண்டு திட்டமிட்டே மற்றவர்கள் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர். விவசாயத்துக்கும் மகாசபைக்கும் சம்பந்தம் இல்லாத நபர்களை போட்டியின்றி தேர்தலில் வெற்றி பெற செய்துள்ளனர். இதன் மூலம், உண்மையான விவசாயிகளால் நடத்தப்பட்ட நீர் பாசன சபையை தி.மு.க.,வினர் சதி செய்து கைப்பற்றி உள்ளனர். முதல்வர் உடனடியாக தலையிட்டு, நேர்மையான முறையில் மறுதேர்தல் நடத்த வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.