குஜராத் மாநிலம் காந்திநகரில் தேசியப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை பிரதமர்நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துவைத்தார். அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷாவும் இவ்விழாவில் கலந்து கொண்டார். அதில் பேசிய அமித் ஷா, ‘நரேந்திர மோடி குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது, சட்டம் ஒழுங்கை அவர் புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கினார். அவர் மேற்கொண்ட முதல் நடவடிக்கை காவல்துறையை நவீனமாக்கியதுதான். அவரது தலைமையின் கீழ், குஜராத் கணினிமயமாக்கப்பட்ட காவல்நிலையங்களைக் கொண்ட முதல் மாநிலமாக ஆனது. காவல் நிலையங்களை இணைக்கும் நவீன மென்பொருளுக்கான தளம் மோடியால் உருவானது. 2018ம் ஆண்டு முதல் 5 பிரிவுகளைச் சேர்ந்த 1,091 மாணவர்கள் இங்கு பட்டம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும், ஏதாவது ஒரு வழியில் நாட்டுக்கு நிச்சயமாக பங்களிக்க முடியும். தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக வளாகங்கள் நாடு முழுவதும் திறக்கப்படும். தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகம் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல அமைப்புகளுடன் பணியாற்றி, அவற்றின் தேவையைப் பூர்த்தி செய்யுமளவுக்கு பயனுள்ள வழிகாட்டுதலை வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று கூறினார்.