காங்கிரசுக்கு அட்வைஸ்

திருணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்களான  குணால் கோஷ், ஃபிர்ஹாத் ஹக்கீம் போன்றோர் சமீபத்தில் வெளியான ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பற்றி பேசுகையில், ‘காங்கிரஸ் போன்ற பழைய கட்சி ஏன் மறைந்து வருகிறது என்று எனக்குப் புரியவில்லை. ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பா.ஜ.கவுக்கு எதிரான தேசிய அளவிலான பிரச்சாரத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிட்டது. எனவே, காங்கிரசை திருணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துவிட வேண்டும். மமதா பானர்ஜியின் தலைமையின் கீழ் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். அப்போது மட்டுமே பா.ஜ.கவை எதிர்க்கும் திறன் அவர்களுக்கு கிடைக்கும். பா.ஜ.க போன்ற ஒரு சக்திக்கு எதிராக காங்கிரஸால் போராட முடியாது என்று நாங்கள் நீண்ட காலமாக கூறி வருகிறோம். மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள்தான் அதற்குத் தேவை. இதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும்’ என காங்கிரசை கிண்டல் செய்துள்ளனர். ஆனால் இதில் சுவாரஸ்யமாக, கோவாவில் மகாராஷ்டிரா கோமந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட திருணாமுல் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தைக் கூட பெற முடியாமல் பரிதாபமாக தோற்றது. இரண்டு இடங்களை வென்ற மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி பா.ஜ.கவுக்கு தனது ஆதரவை அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.