ஆந்திரப் பிரதேசத்தில் கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் மிகப்பெரிய தன்னார்வ தொண்டு நிறுவனமான ‘ஏ.எம்.ஜி இந்தியா இன்டர்நேஷனல்’ சிறார் நீதிச் சட்டத்தை மீறியது மற்றும் எப்.சி.ஆர்.ஏ வெளிநாட்டு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதை கண்டறிந்தது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்). இதனையடுத்து இந்த ஆணையம், உள்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஏ.எம்.ஜி இந்தியா இன்டர்நேஷனல் என்ற இந்த கிறிஸ்தவ மிஷனரிக்கு தடை விதிக்கக் கோரியுள்ளது. இந்த மிஷனரி, சட்டத்தை மீறி பல்வேறு ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் படங்கள், பிறந்த தேதி, வயது போன்ற முக்கியமான தரவுகளை தனது இணையதளத்தில் பதிவேற்றி வருவது கண்டறியப்பட்டு உள்ளது. மேலும், நர்சரி முதல் பட்டப்படிப்பு வரை பயிலும் மாணவர்கள் மீதும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் மீதும் இந்த அமைப்பு கிறிஸ்தவ மதத்தை திணித்துள்ளது. மாதாந்திர உணவு, சத்துணவு, நிதியுதவி என்ற போர்வையில் அவர்களை கட்டாயப்படுத்தியுள்ளது. விரைவில் இப்புகார் மீது உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என கருதப்படுகிறது.