நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்பார்த்தது போலவே உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய இடங்களில் பா.ஜ.க பெரும்பான்மையான இடங்களில் வென்றுள்ளது. இது பா.ஜ.க அரசின் சாதனைகளுக்கு மக்கள் அளித்த ஏகோபித்த அங்கீகாரம். மக்கள் வளர்ச்சி மற்றும் தேசப்பற்றின் பக்கமே உள்ளனர் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இது. கருத்துக்கணிப்புகள் தெரிவித்தது போலவே பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இது அங்கு வேகமாக பரவி வரும் கிறிஸ்தவ மதமாற்றங்கள், அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு, பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் கைகோர்த்து செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
கூட்டணியை நம்பாமல் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் பஞ்சாப்பில் பா.ஜ.கவுக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட வேண்டும், சீக்கியர்கள் மறந்துவிட்ட அவர்களின் வரலாறு, பழம்பெருமைகள், வீரம் தேசப்பற்று, பாரம்பரிங்களை அவர்களுக்கு மீண்டும் நினைவூட்ட வேண்டும். பிரிவினைவாதிகளின் திட்டங்கள் குறித்து மக்களுக்கு புரியவைக்க வேண்டும். மேலும், மக்களின் நல்வாழ்வுக்கு நல்ல திட்டங்கள் தீட்டி செயல்படுத்தினால் மட்டும் போதாது. அதனை கடைகோடியில் உள்ள பாமரனுக்கு அவருக்கு புரியும் விதத்தில் எப்படி கொண்டு சென்று சேர்ப்பது என்பதை ஆராய வேண்டும் என்பதே பஞ்சாப்பில் பா.ஜ.க கற்க வேண்டிய பாடம். இதற்கு ‘விவசாயிகளின் வாழ்க்கையை வளப்படுத்தும் நல்ல நோக்கில் மத்திய அரசு செயல்படுத்திய புதிய விவசாய சட்டங்கள் எதிர்கட்சிகளால் மக்களிடம் தவறாக திசை திருப்பப்பட்டது’ என்பது சிறந்த உதாரணம்.
ஒரு காலத்தில் தன்னை எதிர்க்கவே ஆள் இல்லாமல் எதேச்சையாக இந்த நாட்டையே ஆண்ட காங்கிரஸ், இந்த ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் காணாமல் போனது. தற்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர் என்ற இரண்டு மாநிலங்களில் மட்டுமே நேரடி ஆட்சி, மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அம்மாநில கட்சிகளின் முதுகில் சவாரி செய்யும் நிலை என கடந்த சில வருடங்களாகவே கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக உள்ளது காங்கிரஸ் நிலைமை. இதற்கு காரணமாக ஊழல், பொய் புரட்டு, திறமையற்ற தலைமை, பேராசை என பல காரணங்களை முன் வைக்கலாம். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படை அவர்களின் ‘தேசப்பற்றின்மை’ என்ற ஒற்றை சொல்லில் அடங்கிவிடும். எனவே இனியாவது காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் தேசப்பற்றை வளர்த்துக்கொள்வதை குறித்து சிந்தித்தால் நலம்.