கோவை, செல்வபுரம் தில்லை நகரைச் சேர்ந்தவர் அருண்குமார். ஹைதராபாதில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றும்பொழுது அவருக்கு திருவாரூரைச் சேர்ந்த சஹானா என்ற முஸ்லிம் பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அருணின் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் கடந்த செப்டம்பரில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின், சஹானா ஹிந்து மதத்துக்கு மாறினார். மகள் ஹிந்துவாக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த சஹானாவின் பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள், அருண்குமாரை முஸ்லிம்மாக மாற வலியுறுத்தினர். இதற்கு அவரின் தந்தை குமரேசன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவரை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டனர். குமரேசன் குடும்பம் வீடு மாறியதை அறியாமல் பழைய வீட்டை வேவு பார்த்தனர். சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து ஈரோட்டைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா, திருச்சியைச் சேர்ந்த இம்ரான்கான், சதாம் உசேன், சென்னையைச் சேர்ந்த பக்ருதீன், உ.பி.,யைச் சேர்ந்த ராம்வீர் அஜய் ஆகிய ஐவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குமரசானை கொல்ல சஹானாவின் உறவினர்கள் ஒரு வாட்ஸ்ஆப் குழுவை துவங்கி அதில் விவாதித்துள்ளனர். உ.பி’யைச் சேர்ந்த ஒருவரிடம் துப்பாக்கி வாங்க முயன்றனர். அது கிடைக்காததால் அரிவாள், கத்திகளுடன் கொலை செய்ய முயன்றுள்ளனர் என தெரியவந்துள்ளது. சஹானாவின் தாய் நூர்நிஷா திருவாரூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிரணி நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.