மூவர்ணக் கொடிக்கு மரியாதை

உக்ரைனில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்துவந்த உத்தரப்பிரதேச  மாநிலம் அலிகரை சேர்ந்த மாணவி நேயம் ரஷீத் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டார். இது குறித்து அவர் கூறுகையில், ‘ருமேனியா எல்லையைத் தாண்டியவுடன், பாரதப் பிரஜைகளுக்கு மத்திய அரசு விமானங்களை ஏற்பாடு செய்தது. ஆனால், எல்லைப் பயணம் எங்களுக்கு எளிதாக இருக்கவில்லை. எளிதில் அனுமதி பெற பேருந்துகளில் பாரதத்தின் தேசியக் கொடிகளை ஒட்டுமாறு மாணவர்களுக்கு நமது தூதரகம் அறிவுறுத்தியது. வழியில் பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க எங்கள் பேருந்துகளில் தேசியக் கொடியை வைத்துக்கொண்டு சென்றோம். இது எங்களுக்கு பெருமையாக இருந்தது. ரஷ்யப் படைகள் எங்களை மூவர்ணக் கொடியைப் பார்த்ததும் எங்களை தடுக்கவில்லை, எங்களுக்கு எளிதாக அனுமதி கிடைத்தது’ என்றார். நேயமின் தந்தை சையத் ரஷீத் ஆலம், தனது மகள் பத்திரமாக வீடு திரும்பியதற்கு மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.