அசாம் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 977 வார்டுகளில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து 807 வார்டுகளிலும், காங்கிரஸ் 71 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. மற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 99 வார்டுகளில் வெற்றி பெற்றனர். 80 பேரூராட்சிகளில் 74ல் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது மற்றும் அதன் கூட்டணியான ஏ.ஜி.பி இரண்டு நகராட்சி வாரியங்களை வென்றுள்ளது. காங்கிரஸ் 1ல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. சுயேச்சை வேட்பாளர்கள் 2 பேரூராட்சி வாரியங்களில் வெற்றி பெற்றனர். பதுருதீன் அஜ்மல் தலைமையிலான ஏ.ஐ.டி.யு.எப் கட்சி எதிலும் வெற்றி பெறவில்லை. அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது டுவிட்டர் பதிவில், ‘பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி லட்சியங்களைப் பரப்புவதில் அயராது உழைத்த அனைத்து பா.ஜ.கவினரையும் தலைவர்களையும் நான் வாழ்த்துகிறேன். வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான இந்த மகத்தான மக்களின் ஆணையானது, முன்னேற்றத்திற்கான நமது நிகழ்ச்சி நிரலைத் தொடர நம்மை ஊக்குவிக்கும்’ என தெரிவித்துள்ளார்.