மதுரை, காஜிமார் தெருவைச் சேர்ந்த முகமது இக்பாலின் சந்தேகத்திற்கிடமான சமூக வலைதளப் பதிவையடுத்து, அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என காவல்துறைக்கு சந்தேகம் எழுந்தது. விசாரணையில், முகமது இக்பால் தலைமையிலான ஒரு பயங்கரவாத கும்பல், தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்ப்பு, நிதி திரட்டுதல், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் துண்டு பிரசுரங்கள் வினியோகம் உள்ளிட்ட சதிச் செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து, முகமது இக்பால் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ இவ்வழக்கை கைகளில் எடுத்து விசாரிக்கத் துவங்கியது. முகமது இக்பால், அவரது கூட்டாளிகள் வீடுகள் உள்ளிட்ட 16 இடங்களில் சோதனை செய்யப்பட்டது. அதில் அவர்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்கு பல்வேறு ஆதாரங்கள் சிக்கின. சமீபத்தில் கும்பகோணத்தில், ஜியாவுதீன் பாஹவி என்பவர் ‘ஹிஸ்பு – உத் – தர்’ என்ற பயங்கரவாத அமைப்பை துவங்கி ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு நடத்தியது தெரியவந்ததை அடுத்து அவரையும் என்.ஐ.ஏ கைது செய்தது. இவர்களைப் போலவே பல அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளும், அதன் ஆதரவாளர்களும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேசத்துரோக செயல்களில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர்களையும் கைது செய்ய என்.ஐ.ஏ மற்றும் கியூ பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.