ஜன் ஔஷதி பயனாளிகளுடன் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி காட்சி மூலம் ஜன் ஔஷதி மருந்தக உரிமையாளர்கள், திட்டத்தின் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் தேசத்தின் பல்வேறு பகுதிகளை சேந்த பயனாளிகள் பிரதமருடன் உரையாடினர். அப்போது பேசிய பிரதமர், ‘நாட்டில் தற்போது 8,500க்கும் மேற்பட்ட ஜன் ஔஷதி மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை சாமானியர்களுக்கான தீர்வு மையங்களாக மாறியுள்ளன. புற்றுநோய், நீரிழிவு, இதயநோய் போன்ற முக்கிய நோய்களுக்கான 800க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலையை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. 50 கோடிக்கும் அதிகமானோர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்துள்ளனர். 3 கோடிக்கும் அதிகமான ஏழை, நடுத்தர மக்கள் இதனால் பயன்பெற்று 70 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தியுள்ளனர். பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தால் 550 கோடி ரூபாயை சேமித்துள்ளனர். முழங்கால் மாற்று மற்றும் மருந்து விலைக் கட்டுப்பாடு மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் ஏழைகளுக்கு மிச்சமானது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில்  உள்ள அரசு இடங்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் ஏழை, நடுத்தர  மருத்துவ மாணவர்கள் பயன்பெறுள்ளனர்’ என தெரிவித்தார்.