போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் மனிதாபிமான நெருக்கடி நிலவி வரும் நிலையில், சுவாமிநாராயண் சன்ஸ்தா கோயிலின் செய்தித் தொடர்பாளர் சுவாமி பிரம்மவிஹாரி தாஸை அழைத்து பேசிய பிரதமர் மோடி, உக்ரைன் எல்லையில் உள்ள மாணவர்களுக்கு உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து உக்ரைனுடனான போலந்து, ருமேனிய மற்றும் ஹங்கேரிய எல்லைகளில் இந்திய நாட்டவர்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதிசெய்ய சுவாமிநாராயண் சன்ஸ்தா கோயில் நிர்வாகம் பொறுப்பேற்றுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள தனது தன்னார்வலர்களை உடனடியாக தொடர்புகொண்டு இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதுகுறித்து பேசிய சுவாமி பிரம்மவிஹாரி தாஸ், “ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி என்னை அழைத்தார். உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களின் நிலை குறித்து வேதனை தெரிவித்தார். போலந்து, ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவாக்கியா நாடுகளுடன் உக்ரைன் எல்லைகளில் அவர்களுக்கு உதவ ஐரோப்பாவில் உள்ள எங்கள் தன்னார்வலர்களை அணிதிரட்ட வேண்டும். மாணவர்களுக்கு உணவு, குடிநீர், தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். தன்னார்வலர்களை திரட்டி வருகிறோம். மூவாயிரம் பேருக்கு உணவளிக்கக்கூடிய நடமாடும் சமையலறைகளை எடுத்துச் செல்வது, மக்கள் அதிக எண்ணிக்கையில் தங்கக்கூடிய இடங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்து வருகிறோம். அங்குள்ள மக்களும் எங்களுக்கு உதவ முன்வருகிறார்கள். கடவுளின் அருளால் எல்லாம் சரியாகிவிடும்” என்றார். இதைத்தவிர அங்குள்ள பல ஹிந்து கோயில்கள், சீக்கிய குருத்வாராக்கள் போன்றவையும், சில தன்னார்வலர்களும் மக்களுக்கு தங்குமிடம், உணவு மற்றும் பிற வசதிகளை அளித்து உதவ முன்வந்துள்ளன.