வீர ஜவான்களுக்கான ‘வீர்’ ஹெல்மெட்

சீக்கியர்களுக்கு தலைப்பாகை என்பது அவர்களது பெருமை. இது அவர்களின் நம்பிக்கையின் மட்டுமல்ல, தைரியம், சுயமரியாதை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சின்னம். இதுவரை சீக்கிய ராணுவ வீரர்கள் தலைப்பாகை மேல் அணியும் வண்ணமாக  ஹெல்மெட் உருவாக்கப்படவில்லை. நவீன  துப்பாக்கித் தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுச் சிதறல்களைத் தாங்கி சீக்கிய வீரர்களின் உயிரைக் காக்கும் நோக்கத்தில், அவர்களுக்காக ஒரு புதியரக போர்கால ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘வீர் ஹெல்மெட்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹெல்மெட்டை மாடுலர் அக்சஸரி கனெக்டர் சிஸ்டம் தயாரித்துள்ளது. இதில் சென்சார்கள், நவீன தகவல் தொடர்பு அமைப்புகள், இரவுக் கண்ணாடி, கேமரா ஆகியவற்றை பொருத்தலாம். லேசான எடை, பூஞ்சை எதிர்ப்பு, தீ எதிர்ப்பு, அதிர்ச்சியைத் தாங்குதல், ரசாயன பாதுகாப்பு, அனைத்து வானிலை பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த கண்டுபிடிப்பை வரவேற்றுள்ள பாதுகாப்பு அமைச்சகம், உடனடியாக 1.59 லட்சம் ஹெல்மெட் தயாரிக்கும் பெரிய ஒப்பந்தத்தை அந்த நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.