மலையாள நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், ‘ஹிஜாப் சர்ச்சை ஒரு திட்டமிட்ட சதி. இது ஒரு அரசியல் சர்ச்சை. முஸ்லிம் பெண்களின் கல்வியைத் தடுக்கும் நடவடிக்கை. ஹிஜாப் எங்கும் தடை செய்யப்படவில்லை. மக்கள் தாங்கள் விரும்பும் உடையை அணியும் உரிமை உள்ளது. அதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால், ஒவ்வொரு கல்வி நிறுவனமும் சில நியதி, விதிமுறைகளை வலியுறுத்துகிறது. சீருடை அதன் ஒரு பகுதி.
பொது சிவில் சட்டம் தவறாக விளக்கப்படுகிறது. அது அனைவருக்கும் சம உரிமைகள், கடமைகளை உறுதி செய்யும் சட்ட அமைப்பு. எந்தவொரு மத விஷயத்திலும் அரசின் தலையீட்டிற்கு வழி வகுக்காமல், மதம் கட்டுப்படுத்தும் சில தீய பழக்கங்களை நிறுத்துவதே இதன் கருத்து. அது எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல.
சீக்கிய மதத்தின் இன்றியமையாத அங்கமான தலைப்பாகையுடன் ஹிஜாப்பை ஒப்பிடுவது தவறு. ஹிஜாப் இஸ்லாத்தின் ஒரு பகுதி அல்ல. ஹிஜாப் குர்ஆனில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பெண்களின் ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக இல்லை. இது ‘பர்தா’ என்பதைக் குறிக்கிறது. அதாவது நீங்கள் பேசும்போது நடுவில் பர்தா இருக்க வேண்டும்’ என கூறினார். மேலும், ஹிஜாபிற்கு எதிராக தொடர்ந்து போராடிய நபிகள் நாயகத்தின் உறவினர் குறித்த கதையை கூறிய ஆளுநர், இஸ்லாத்தின் முதல் தலைமுறைப் பெண்கள் இப்படித்தான் நடந்துகொண்டார்கள் என்றார்.