தி.மு.க ஹிந்துவிரோத கட்சி என்ற பிம்பம் உடைக்கப்படும் என்று தமிழக முதல்வரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது, ஹிந்துக்களிடையே சிரிப்பை வரவழைத்துள்ளது. தி.மு.க இன்று நேற்றல்ல என்றுமே ஹிந்துவிரோத கட்சிதான் என்பதற்கு ஆயிரம் உதாரணங்களை பட்டியலிட முடியும். அதில் ஒருசில:
தி.மு.கவின் தாய் அமைப்பான தி.கவைத்துவங்கிய ஈ.வே ராமசாமி, ஹிந்து தெய்வங்களையும், ஹிந்துக்களையும் பழித்தது பற்றி உலகே அறியும். அந்த விஷயம் தற்போதைய தலைவர் வீரமணி வரை தொடர்கிறது. அதில் இருந்து பிரிந்து உருவான தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட குட்டி குட்டி அமைப்புகளும் ஹிந்து எதிர்ப்பு என்ற ஒன்றைவைத்தே இன்றுவரை பிழைப்பை நடத்துகின்றன.
தி.மு.கவை துவங்கிய அண்ணாதுரை, மீனாட்சி அம்மனை “கள்ளி” என்று கேவலமாக பேசினார். அவருக்கு பின், தி.மு.கவை தனது குடும்பக் கட்சியாக்கிக்கொண்ட கருணாநிதி, “ஸ்ரீரங்கநாதரை பீரங்கி வைத்து தகர்க்கும் காலம் எப்போது வரும், ஹிந்துக்கள் என்றால் திருடர்கள், ராமர் என்ன என்ஜினியரா?” என்று பேசியவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம்.
தற்போதைய தி.மு.க தலைவர் ஸ்டாலின், மாற்று மத திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஹிந்து திருமண முறையை தரம் தாழ்த்திப் பேசியது, “ஹிந்து என்றாலே எரிகிறது”, “சமஸ்கிருத மந்திரங்களில் உடல் நடுங்கும் பொருள் இருக்கிறது” என்றும் கூறியது. தனக்கு வைத்துவிட்ட திருநீறை உடனே அழித்தது, ஹிந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லாமல் தவிர்ப்பது. லாவண்யா தற்கொலையை திசைத்திருப்ப முயல்வது, கனிமொழி, உதயநிதி போன்றவர்கள் விநாயகரைப் பற்றியும், திருப்பதி கோயில் பற்றியும், அநாகரிகமாக முறையில் பேசியது, வைரமுத்து ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளை கொச்சைபடுத்தி பேசியது, திருமாவளவன் சனாதனத்தை வேரறுப்போம் என பகிரங்கமாக பேசுவது போன்றவற்றை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.
இன்றைக்கும் தி.மு.கவுடன் பயணிக்கின்ற அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இடதுசாரிகள் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மே 17 இயக்கம், கருப்பர் கூட்டம் என்று பலர் ஹிந்து மதத்தை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். தேர்தலில் மதத்தை கலக்கக்கூடாது என அரசியலமைப்பு சொல்லியும் முஸ்லிம் பிரதிநிதிகள், கிறிஸ்தவ பங்குத் தந்தைகள் பகிரங்கமாகவே தி.மு.கவை ஆதரித்து ஓட்டு கேட்கின்றனர். இப்படிப்பட்டவர்களை ஸ்டாலின் என்றாவது கண்டித்ததுண்டா? அவர்களுக்குத்தானே பட்டங்களும் பதவிகளும் கொடுக்கிறார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பதுபோல, இந்த ஒருசில உதாரணங்களே தி.மு.க ஹிந்துவிரோத கட்சிதான் என்பதை நிரூபிக்க போதுமானவை.
மதிமுகன்