பழங்குடியினரல்லாத முஸ்லீம் நபரான கம்ருல் இஸ்லாம் லஸ்கர் என்பவர், மிசோ பழங்குடியினப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அரசு சலுகைகளை பெறுவதற்காக முறைகேடான வழியில் தனக்கு பழங்குடியின (ஏஸ்.டி) சான்றிதழ் பெற்றார். இந்த சம்பவம் கடந்த 2018ல் காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்தது. இந்த செய்தி தற்போது வெளியானதையடுத்து, அங்கு சர்ச்சை வெடித்தது. யங் மிசோ அசோசியேஷன் (ஒய்.எம்.ஏ) மற்றும் பிற சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து லஸ்கரின் எஸ்.டி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஒய்.எம்.ஏ தலைவர் ஒருவர், லஸ்கருடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் இது சட்ட துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டம். மிசோரமில் இதுபோன்ற ஒரு போக்கு அதிகரிக்காமல் இருக்கவே இந்த போராட்டம் என்று கூறினார். கே ஆர் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன உரிமையாளரான கம்ருல் இஸ்லாம் லஸ்கர், தனது சலுகையை பயன்படுத்தி விமான நிலையத்தின் சீரமைப்புப் பணிகள், சாலைகள் ஒப்பந்தம் என பல அரசுப் பணிகளை முறைகேடாக பெற்றுள்ளார். மிசோரம் முதல்வர் ஜோரம்தங்காவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது.