வெளிநாட்டு நிறுவன்ங்களால் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், அயர்ன் மேன் என பல சூப்பர் ஹீரோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளனர். இக்கால சிறுவர்களுக்கு இவர்களை தெரியுமே தவிர, 1990களில் வெளியான பாரதத்தின் முதல் சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான ‘சக்திமான்’ குறித்து அவ்வளவாகத் தெரியாது. அன்றைய காலகட்டத்தில் தூர்தர்ஷனில் வெளியான சக்திமான் தொலைக்காட்சித் தொடரும் சக்திமானாக நடித்த முகேஷ் கண்ணாவும் மிகப் பிரபலம். பாரதத்தின் தலைசிறந்த சூப்பர் ஹீரோவான சக்திமானை இக்கால குழந்தைகள் அனுபவிக்கும் வண்ணம், சோனி பிக்சர்ஸ், ப்ரூயிங் தாட்ஸ், பீஷ்ம் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. இதன் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சக்திமானாக பிரபல ஹீரோ ஒருவர் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், யார் அவர் என்பது தெரிவிக்கப்படவில்லை.
சக்திமான் முதன்முதலில் தூர்தர்ஷனில் 13 செப்டம்பர் 1997 முதல் மார்ச் 27, 2005 வரை தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இத்தொடர், பாரத பாரம்பரிய கலாச்சார நம்பிக்கைகளை மையப்படுத்தி அழகாக வடிவைக்கப்பட்டிருக்கும். ரிஷி முனிவர்கள், தேசத்தில் நடக்கும் தீமைகளை எதிர்க்க ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்தது, குண்டலினி யோகத்தின் மூலம் அவரது உடலின் 7 சக்கரங்களைத் தூண்டி, சில அபூர்வ சக்திகளை அளித்து அவற்றிற்கு எதிராக போராட அனுப்பி வைப்பார்கள். அவர், எப்படி அந்த தீய சக்திகளை முறியடித்து வெற்றி பெறுகிறார் என்பதே இந்தத் தொடர்.