வங்கிகளுக்குப் ‘பெப்பே’ காட்டினால் ‘கரும்புள்ளி, செம்புள்ளி’ கட்டாயம்!

பொருளாதாரத்தில் பண சுழற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஜீவ நதி ஓடிக்கொண்டே இருப்பதைப் போல பொருளாதார ஆறும் தங்குதடையின்றி ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லையெனில் தேக்கம் ஏற்பட்டுவிடும். தண்ணீரும் பணமும் அனாவசியமாகத் தேங்கினால் விரும்பத்தகாத விளைவுகளே ஏற்படும்.

கைமாற்றாக பணம் கொடுப்பதும் வாங்குவதும் உறவினர்களிடையே நண்பர்களிடையே சகஜமான நிகழ்வாக உள்ளது. இதற்கு நம்பிக்கைதான் அடிப்படை. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டவர்கள் என்ற அடிப்படையில் இந்த நம்பிக்கைக்கு பங்கம் வராதவகையில் சம்பந்தப்பட்டவர்கள் நடந்துகொள்கிறார்கள். விதிவிலக்காக சிலர் பிறழ்வதும் உண்டு.

வங்கிகள், வாடிக்கையாளர்களிடம் டெப்பாசிட் பெறுகின்றன. இந்த தொகையை அப்படியே வைத்துக்கொண்டிருந்தால் வங்கிகள் இயங்க முடியாது. டெப்பாசிட் தொகையை தேவைப்படுபவர்களுக்கு கடனாக வங்கிகள் வழங்குகின்றன. தொகை வரத்தும் போக்கும் வரத்தும் என பொருளாதாரம் சுழன்றுகொண்டே இருக்கிறது. இதில் ஏதேனும் ஒன்று தடைப்பட்டாலும் கூட பிரச்சினை ஏற்பட்டுவிடுகிறது.

கடன் பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற கருத்து பரவலாக படிந்துள்ளது. ஆனால் நிகழ்கால நிலவரம் துரதிருஷ்டவசமாக இதிலிருந்து மாறுபட்டுள்ளது. இப்போதெல்லாம் கடன் வாங்கியவர்களின் நெஞ்சம் சற்றும் கலங்குவதில்லை. மாறாக கடன் நெஞ்சம்தான் பெரிதும் கலங்குகிறது.

வங்கிகளில் பெருந்தொகையை கடனாக வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தும் சக்தி இருந்தபோதிலும் திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பெரும் தொகையை கடனாக திருப்பி செலுத்தும் சக்தி இருந்தும் அதை செலுத்தாதவர்களின் எண்ணிக்கை 9,000த்தை தாண்டிவிட்டது. இதில் சம்பந்தப்பட்ட தொகை ரூ. 1,10,050 கோடி என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வங்கிக்கடனை வசூலிக்க எத்தகைய நடவடிக்கைகளை எல்லாம் எடுக்க முடியுமோ அத்தகைய நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கவேண்டும் என்று வங்கிகளை மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கடன் பாக்கியை கட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

சிலர் தங்களது கடன் பற்றிய விவரங்களை பிறர் அறிந்தால் கௌரவத்துக்கு இழுக்கு என்று கருதக்கூடும். இவர்களிடமிருந்தாவது உடனடியாக கடன் பாக்கியை வசூலிக்க முடியும் என்ற அடிப்படையில் வங்கிகளில் பெருந் தொகையை கடனாக வாங்கிவிட்டு திருப்பி செலுத்துகின்ற ஆற்றல் இருந்தபோதிலும் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் புகைப்படங்களை ஊடகங்களில் வெளியிட்டு கேவலப்படுத்த வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கிக் கடனை செலுத்தாதவர்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பை தனிநபர் சார்ந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்க்கக்கூடாது. ஒட்டுமொத்த சமூக பொருளாதார கண்ணோட்டத்தின் அடிப்படையில் பார்க்கவேண்டும். இவ்வாறு உற்று நோக்கும்போது வங்கிகளுக்கு மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவு முற்றிலும் சரியானதே என்பது விளங்கும்.