ஐ.சி.எஸ் தேர்வில், பாரத அளவிலேயே நான்காம் இடம்பெற்று தேர்ச்சி அடைந்திருந்தது அந்த இளம் மொட்டு. மிகப்பெரிய பதவி, ஆனால் தானும் உயர்ந்ததொரு அதிகார பொறுப்பில் உட்கார போகிறோமே, வீறுநடை போட்டு அதிகாரிகள் சேவகர்கள் புடைசூழ உயர்ந்த சிவில் சர்வீஸ் பணிப் புரியப்போகிறோமே போன்றவையெல்லாம் ஆங்கிலேயர் முன் அவரை மண்டியிடச் செய்யவில்லை. மாறாகத் தேர்ச்சி பெற்ற உடனேயே தனது ராஜினாமா கடிதத்தை மான்டேகு பிரபுவிடம் அளித்தது வீரம் கொப்புளித்த அந்த மொட்டு.
“உன் பெற்றோர் வருத்தப்படமாட்டார்களா” என்று மாண்டேகு வினவியதற்கு “என் தாய் தந்தையருக்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் என் தாய்நாட்டின் வருத்தம் அதைவிடப் பெரியது” என்று தனது சொள்லி, அவருக்கு அதிர்ச்சயளித்தான். அவன்தான் நேதாஜி சுபாஷ் சந்திரா போஸ். நாம் எல்லோரும் கொண்டாடும் பாரத வரலாற்றின் ஒப்பற்ற நாயகன்.
1924ல் பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நேதாஜி. அந்தச் சிறையிலேயே முடக்க நினைத்தது ஆங்கில அரசு. ஆனால், சிறையில் இருந்தபடியே வங்க சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடினார் போஸ். வங்க மக்கள் அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு இதை விட சான்றென்ன வேண்டும்? இந்த வெற்றி ஆங்கில அரசின் கழுகு பார்வையை போஸின் பக்கம் திருப்பியது. இவர் தங்களுக்கு பெரிய அச்சுறுத்தல் என்று உணர வைத்தது.
மாண்டலே சிறையில் காசநோயினால் பீடிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை விடுவிக்க போராட்டம் நடைபெற்றது. சுபாஷ் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையெனில் 3 ஆண்டுகள் பாரதத்தில் நுழையக்கூடாது என இரண்டு நிபந்தனைகளோடு அவரை விடுதலை செய்ய நினைத்தது ஆங்கில அரசு. சுபாஷோ நான் கோழையல்ல, மன்னிப்புக் கோர மாட்டேன், சொந்த நாட்டுக்குள் வரக்கூடாதென்று சொல்ல இவர்கள் யார்? நிபந்தனைகளை ஏற்க முடியாது என்று கூறி விடுதலையாக மறுத்தார். அந்த வங்கச் சிங்கத்தின் கர்ஜனைக்கு ஆங்கில அரசு அரண்டுதான் போனது.
வரலாற்றுப் பக்கங்களை இன்றளவுக்கும் அலைக்கழிக்கும் ஓர் அழியா சகாப்தம் நேதாஜி. ‘அவரது 125வது பிறந்த தினம் இன்று. பாரத இளைஞர்களின் கனவாய் திகழ்ந்த வாழ்ந்த இந்த சிங்கம் நமது தன்னம்பிக்கையின் முழு உருவம்.
ஆர். கிருஷ்ணமூர்த்தி