கோட்சேவாக நடித்த எம்.பி

நான் ஏன் காந்தியை கொன்றேன் என்ற திரைப்படம் காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30ல் லைம்லைட் ஓ.டி.டியில் வெளியாகிறது. இந்த படத்திற்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசும் இந்த படத்தை எதிர்க்கின்றன. இத்தனைக்கும் இதில் கோட்சேவாக நடித்துள்ளவர் தேசியவாத காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும் நடிகருமான அமோல் கோல்ஹே என்பவர்தான். இந்த திரைப்படம் 2017லேயே எடுக்கப்பட்டது என்றாலும் தற்போதுதான் வெளியிடப்படுகிறது.

அமோல் கோல்ஹே , 2008 முதல் நடித்து வருகிறார். பல வரலாற்று கருப்பொருள் நிறைந்த படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். சத்ரபதி சிவாஜி, அவரது மகன் சாம்பாஜி போன்ற வேடங்களிலும் நடித்துள்ளார். அரசியலில் ஈடுபட்ட அவர் 2014ல் சிவசேனாவில் இணைந்தார். அப்போதுதான் இப்படத்தில் அவர் கோட்சேவாக நடித்தார். பிப்ரவரி 2019ல், அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி’யானார்.

இதுகுறித்து கோல்ஹே வெளியிட்டுள்ள ஒரு வீடியோ அறிக்கையில், இந்த படத்தில் நான் கோட்சேவாக நடித்ததால் பலர் காயப்பட்டதாகத் தோன்றுகிறது. கோட்சேவின் செயல்களையோ, காந்திக்கு எதிரான கருத்துக்களையோ நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் படத்தை விளம்பரப்படுத்தவும் இல்லை. ஒரு நடிகராக மட்டுமே நடித்துள்ளேன் என கூறியுள்ளார்.