வீரதீர விருதுகள் இணையதளம் (https://www.gallantryawards.gov.in/) எனப்படும் மெய்நிகர் அருங்காட்சியகத்தை பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் தொடங்கி வைத்தார். இந்த மெய்நிகர் அருங்காட்சியகத்தில், வீரதீர விருதை வென்றவர்களின் மனஉறுதி மற்றும் தியாகத்தை சித்தரிக்கும் கதைகள் புதுமையான முறையில் உபயோகிப்பாளர்களுக்கு உகந்த வடிவில் இடம் பெற்றுள்ளது. 3டி வடிவிலான அனுபவங்கள், காட்சிக் கூடம் அமைத்தல், போர் நினைவகங்கள் பற்றிய சுற்றுலா, போர் ஒருங்கிணைப்பு அறை, வள மையம், செல்பி பூத் மற்றும் சாதனங்களை விளக்கக் கூடிய அம்சங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. 75வது சுதந்திர வருட விழாவின் ஒரு பகுதியாக, இந்த மெய்நிகர் அருங்காட்சியகத்தை பாதுகாப்பு அமைச்சகம், இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளர்கள் அமைப்பு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் பாஸ்கராசாரியா தேசிய விண்வெளி பயன்பாடு மற்றும் புவி தகவல் நிறுவனம் ஆகியவை இணைந்து கூட்டாக அமைத்துள்ளன. ராணுவ வீரர்கள், இளைஞர்களிடையே தேசப்பற்றை பரப்பும் முன்மாதிரி நபர்களாகவும், வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்பவர்களாக திகழ்கின்றனர். இந்த மெய்நிகர் அருங்காட்சியகத்தை பார்வையிடுவது பாதுகாப்புப் படைகளில் சேர உந்து சக்தியாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்தார்.