1,000 கோடி ஊழல்

கோவை செல்வபுரத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட பா.ஜ.க. மூத்த நிர்வாகி ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘கடந்த ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 2500 ரொக்க தொகையாக வழங்கியபோது, ரூபாய் ஐந்தாயிரம் வழங்க கோரிய தற்போதைய முதல்வர் ஸ்டாலின், தற்போது வெறும் பொங்கல் தொகுப்பு வழங்கி ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளார். பொங்கல் தொகுப்புடன் வழங்கப்பட்ட மளிகை பொருட்கள் தரமற்றவையாக கலப்படமாக இருந்துள்ளது. பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 1,800 கோடி ரூபாயில், 1,000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் பொங்கல் தொகுப்பில் மக்களை ஏமாற்றிய தமிழக அரசிற்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்’ எனக் கூறினார். தொடர்ந்து, குடியரசு தின விழாவில் தமிழக சிறப்பு ஊர்திகள் புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘தமிழக அரசு இதில் நாடகம் ஆடுகிறது. கடந்த 2006 முதல் மத்தியில் தி.மு.க கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த போதும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே தமிழக சிறப்பு ஊர்திகளுக்கு அனுமதி கிடைத்தது. மற்ற சில ஆண்டுகளில் ஏன் அனுமதி கிடைக்கவில்லை?’ என கேள்வி எழுப்பியதுடன், அரசுக்கும், இதற்கும் தொடர்பில்லை. கடந்த சில ஆண்டுகளில் பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் உ.பி. அரசின் வாகன ஊர்திக்கும் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவித்தார்.