எக்செல்சியர் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சுமார் 2 ஆயிரம் பள்ளிக் கட்டிடங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. ஜம்மு காஷ்மீரை ஆண்ட முந்தைய அரசுகள், சர்வ சிக்ஷா அபியான், ராஷ்ட்ரிய மத்யமிக் ஷிக்ஷா அபியான் ஆகிய இரண்டு மத்திய அரசின் திட்ட நிதியுதவியைப் பெற்று இப்பள்ளிகளை விதிகளை மீறி கட்டியுள்ளனர். அன்றைய ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் பள்ளிகள் தேவைப்படாத இடங்களில்கூட பள்ளிகளைக் கட்டி முறைகேடு செய்துள்ளனர். மேலும், போலியான மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட புள்ளிவிவரங்களை தயாரித்து பணம் ஈட்டியுள்ளனர். வாக்கு வங்கிக்காக இந்த பள்ளிப் பணியாளர்கள் எனக்கூறி ரெஹ்பார் இ தலீம் என்ற திட்டத்தின் கீழ் ஏராளமான இளைஞர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். அடுத்தடுத்து வந்த இவர்களின் அரசுகள் புதுப் பள்ளிகளைத் தாறுமாறாகத் திறந்ததால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்தது. சேர்க்கை வீழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம், தேவைக்கேற்ப பள்ளிகள் திறக்கப்படாத்தும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றாத்தும் தான் என்று அந்த அறிக்கை கூறுகிறது.