நமது நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட பெருமக்களில் ஒருவர் மகாராஷ்டிராவில் பிறந்த மகாதேவ கோவிந்த ரானடே. சிறந்த அறிவுஜீவி, சீர்திருத்தவாதி, எழுத்தாளர், நீதிபதி, அரசியல் தலைவர் என்ற பல பரிமாணங்களை உடையவர் ரானடே.
மராட்டியத்தின் நாசிக் மாவட்டத்தில், நிமாத் என்ற ஊரில் ஜனவரி 18ல் பிறந்தார் ரானடே. தனது பட்டப்படிப்பு, சட்டக்கல்வி முடித்து, மும்பை சிறுநீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட்டாகச் சேர்ந்தார். பிறகாலத்தில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தார்.
அரசுப்பணியில் இருந்தாலும் நாட்டின் நிலை குறித்த விழிப்புணர்வு ரானடேவுக்கு இருந்தது. அதன் காரணமாக 1885ல் இந்திய தேசிய காங்கிரஸ் உதயமானபோது அதன் நிறுவன உறுப்பினரானார் ரானடே. இவரது நேர்மறையான அணுகுமுறை, தலைமைப் பண்பு காரணமாக ஆங்கிலேயர்களுடன் பேச்சு நடத்தும் பிரதிநிதியாக பலமுறை செயல்பட்டார். பின்னாளில் காங்கிரசின் தேசியத் தலைவர்களாக உயர்ந்த பாலகங்காதர திலகர், கோபாலகிருஷ்ண கோகலே ஆகியோருக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் ரானடே.
அந்நாளில் விதவையரின் தலையை மொட்டையடிக்கும் கொடுமையான பழக்கம் இருந்தது. அதனை தடை செய்ததில் ரானடேவின் பங்கு முக்கியமானது. பால்ய திருமணம், வரதட்சிணைக் கொடுமை, கடற்பயணத்திற்கு ஜாதிக் கட்டுப்பாடுகள் போன்ற மூட நம்பிக்கைகளையும் ரானடே எதிர்த்தார். தனது சமூக சிந்தனை, அரசியல் சிந்தனைகளை செயற்படுத்த, புனா சர்வஜைனிக் சபா, பிரார்த்தனை சமாஜம் ஆகியவற்றை நிறுவ ஊக்கமளித்தார்.
சமூக சீர்திருத்தத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாலும், பாரம்பரியம் மீது அசைக்க முடியாத பற்றுக் கொண்ட சனாதனியாக ரானடே வாழ்ந்தார். ஜாதி வேற்றுமைகள், தீண்டாமை ஒழிய குரல் கொடுத்தபோதும், ஜாதிகள் சமூக கட்டுப்பாட்டிற்கு அவசியம் என்பதே ரானடேவின் கருத்தாக இருந்தது. மாற்றத்தை விரும்பிய அதே நேரத்தில், பாரம்பரிய அடிப்படை தகர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். சிறந்த எழுத்தாளரான ரானடே, ‘ஹிந்துபிரகாஷ்’ என்ற ஆங்கில- மராத்தி தினசரி பத்திரிகையை நடத்தினார். அதில் தனது சீர்திருத்தக் கருத்துகளை முன்வைத்துவந்தார். பாரதப் பொருளாதாரம், மராட்டியர் வரலாறு ஆகிய துறைகளில் பல நூல்களை அவர் வெளியிட்டார்.
மராட்டியத்தில் தேசிய சக்திகளின் வளர்ச்சிக்கு அடிகோலிய மகாதேவ கோவிந்த ரானடே, 1901, ஜனவரி 16ல் மறைந்தார். நவீன பாரதத்தின் உருவாக்கத்திற்கு உழைத்த விடுதலை வீரராக ரானடே இன்றும் நினைவு கூரப்படுகிறார்.