சூரியனார் கோயில் ஆய்வு

ஒடிசாவின் கொனார்க்கில் உள்ள புகழ்பெற்ற சூரியனார் கோயிலின் முக்கிய கோபுரம் இடிந்து விழுந்த காரணம் குறித்து ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பெரிய சூறாவளி, மழை, வெள்ள போன்ற பாதிப்புகள் அதற்கு காரணமாக கூறப்பட்டாலும் அதன் உண்மையான காரணம் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இந்நிலையில், ஐ.ஐ.டி கரக்பூரின் புவியியலாளர்கள் குழு சமீபத்தில் நிகழ்த்திய ஒரு ஆய்வில் கோபுரம் இடிந்து விழுந்ததன் பின்னணியில் நியோடெக்டோனிக் செயல்பாட்டின் சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இந்தியத்துணைக் கண்டம் அமைந்துள்ள டெக்டானின் தட்டின் வடக்கு நோக்கிய நகர்வின் விளைவாக ஏற்பட்ட பூகம்பத்தால் இது நிகழ்ந்திருக்கலாம். கடலோர ஒடிசாவின் டெக்டானிக் செயல்பாடுகளை மகாநதி டெல்டா பகுதிகளில் உள்ள சிற்றோடைகளின் ஏற்பட்டுள்ள புதிய வடிவங்கள் மூலம் அறியமுடிகிறது. இந்த டெக்டானிக் இயக்கங்கள் தற்போதுள்ள நீர்நிலைகளின் ஓட்டத்தை சீர்குலைத்திருக்கலாம், கோனார்க் கோயிலுக்கு வடக்கே செல்லும் பழங்கால சந்திரபாகா நதி இந்த டெக்டானிக் நகர்வுகள் காரணமாக வறண்டு போயிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.