சதிச்செயல் முறியடிப்பு

டெல்லியின் காசிபூர் பகுதியில் பயங்கரவாதிகளால் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிபொருள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மீட்கப்பட்ட அந்த வெடிபொருட்கள் சுமார் 1.5 கிலோ எடையுள்ளவை என்றும் அதில் இருந்த ஆர்.டி.எக்ஸ் மற்றும் அம்மோனியம் நைட்ரேட் இரண்டும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்டவை. பயங்கரவாதிகளின் ஸ்லீப்பர் செல்கள் மூலம் இது போன்ற குண்டுகள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களை ஏற்கனவே சென்று அடைந்திருக்கலாம். கடந்த சில மாதங்களாக எல்லைப் பகுதிகளில் ஆளில்லா விமானங்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. பல முறை டிரோன்கள் மூலம் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் வீசப்பட்டுள்ளன. அவை தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தலின்போதோ பயங்கரவாத நடவடிக்கைகளை நிகழ்த்த பயன்படுத்தப்படலாம் என சந்தேகிக்கப்படுவதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. டெல்லி காவல்துறை, தேசிய பாதுகாப்புப் படை, உளவுத்துறை ஒருங்கிணைத்து இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளது. முன்னதாக, காஷ்மீரில் செயல்பட்டு வரும் அல்கொய்தாவுடன் இணைந்த பயங்கரவாதக் குழுவான முஜாஹிதீன் கஸ்வத் உல் ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த வெடிகுண்டை வைத்ததற்கு பொறுப்பேற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.