தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று 3வது அலை பரவத் தொடங்கியுள்ளதால், இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால், வழக்கம்போல தமிழக அரசு, மதுக்கடைகள் குறித்து வாய் திறக்கவில்லை. இதனை கண்டித்தும், மதுக்கடைகளை மூட வலியுறுத்தியும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், பா.ம.க நிறுவனர் ராமதாசும் தி.மு.க அரசை வலியுறுத்தி உள்ளனர். மூன்று நாட்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,862ல் இருந்து 10,978 ஆக உயர்ந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 580 ஆக இருந்தபோதே, டாஸ்மாக் கடைகளை மூட தி.மு.க ஸ்டாலின் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆனால், தற்போது அதே தி.மு.க ஆட்சியில் மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது சிந்திக்கத்தக்கது.