ரயில்வே சொத்துகள், பயணிகள் பகுதி மற்றும் பயணிகளின் பாதுகாப்பு, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான சரக்கு போக்குவரத்து பொறுப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எப்), பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயண அனுபவத்தை வழங்குவதற்காக 24 மணி நேரமும் உழைத்து வருகிறது. இதுமட்டுமல்ல, உள்நாட்டுப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கைப் பராமரித்தல், தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்களின் போது பாதுகாப்பு வழங்குதல் ஆகியவற்றிலும் ஆர்.பி.எப் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவ்வகையில் கடந்த 2021ல் மட்டும், “ஜீவன் ரக்ஷா” திட்டத்தின் கீழ் 601 நபர்கள் ஆர்.பி.எப் பாதுகாவலர்களால் காப்பாற்றப்பட்டனர். 522 ஆக்ஸிஜன் சிறப்பு ரயில்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது. கடத்தல்காரர்களிடமிருந்து 630 பேர் மீட்கப்பட்டனர். “ஆபரேஷன் அமானத்”தின் கீழ் 12,377 பயணிகளுக்குச் சொந்தமான 23 கோடிக்கும் அதிகமான பொருட்கள் மீட்டெடுக்கப்பட்டன. இடைத்தரகர்களுக்கு எதிரான நடவடிக்கையாக 4,100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 4,600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ரயில் நிலையங்களில் 244 “மேரி சஹேலி” குழுக்கள் நிறுத்தப்பட்டன. 15.7 கோடி மதிப்பிலான ரயில் மூலம் கடத்தப்பட்ட போதைப் பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. 620 போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது.