ஸ்டார்ட்அப் புரட்சி

தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல மத்திய அரசு செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்களில் ஒன்று ‘ஸ்டார்ட்அப் இந்தியா’. இதில் பதிவுபெற்ற நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. நாட்டில் தற்போது 630 மாவட்டங்களில் பதிவுபெற்ற ஸ்டார்ட்அப்கள் உள்ளன. ‘ஸ்டார்ட்அப் இந்தியா’ வாரத்தை மத்திய அரசு ஜனவரி 10 முதல் நடத்துகிறது. இதில் 30 அரசுத் துறைகள் கலந்துகொள்கின்றன. புதுமையான ஐடியாக்களுடன் உள்ள 500 ஸ்டார்ட்அப்கள் இதில் பங்கேற்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனத் தலைவர்கள் ஜனவரி 15ல் பிரதமர் மோடியை சந்திக்கின்றனர். 2016 முதல் தற்போதுவரை 60 ஆயிரம் ஸ்டார்ட்அப்கள் பதிவுசெய்துள்ளன. இதனால் 6.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதில் 45 சதவீத ஸ்டார்ட்அப்கள் பெண்களால் நடத்தப்படுகிறது. சுமார் 30 ஆயிரம் நிறுவனங்கள், இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளன. ஸ்டார்ட்அப் புரட்சி நமது நாட்டை வேலை தேடுபவர்கள் நாடு என்பதிலிருந்து வேலை கொடுப்பவர்கள் நாடாக மாற்றிவருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் புதிய ஸ்டார்ட்அப்களை பதிவு செய்து, அதன் மூலம் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க அரசு கவனம் செலுத்துகிறது என மத்திய தொழில் மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் அனுராக் ஜெயின் கூறியுள்ளார்.