பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது நடைபெற்ற பாதுகாப்புக் குறைபாடுகள் வேண்டுமென்றே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம், பஞ்சாப் மாநில முன்னாள் டி.ஜி.பி பி.சி டோக்ரா, மகாராஷ்டிர முன்னாள் டி.ஜி.பி பிரவீன் தீட்சித் உட்பட 27 முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கடிதம் அளித்துள்ளனர். அதில், ‘தேசத்தின் வரலாற்றில் திட்டமிட்ட சதியால் ஏற்பட்ட மிகப் பெரிய பாதுகாப்பு குறைபாடுகளில் இதுவும் ஒன்று. கலவரக்காரர்கள் பிரதமரின் வழியைத் தடுத்து நிறுத்தியது பாதுகாப்புக் குறைபாடு மட்டுமல்ல, அது தேசத்தின் அவமானம். போராட்டக்காரர்கள் என்ற போர்வையில் அவருக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவர்களுடன் அரசு அதிகாரிகளின் கூட்டு வெட்கக்கேடானது. இது பஞ்சாபில் உள்ள மோசமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது. நமது தேசத்தில் ஜனநாயகம் அச்சுறுத்தலில் உள்ளது. இது பஞ்சாபில் உள்ள மோசமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எடுத்துக்காட்டுகிறது. மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டது ஆனால், பிரதமரின் பயண வழியை போராட்டக்காரர்கள் எப்படி அறிந்தார்கள்? ஒரு கட்சியின் (காங்கிரஸ்) பல்வேறு டுவிட்டர் கணக்குகளின் சில ட்வீட்கள் பஞ்சாப் அரசின் நோக்கத்தையும் பொறுப்பற்ற நடத்தையையும் வெளிக்காட்டுகின்றன. ஏற்கனவே, எல்லை மாநிலமான பஞ்சாப்பில், அதன் அமைதியை சீர்குலைக்க எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்கள் நடைபெற்று வருகின்றன. மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து தலைவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அரசின் கடமை. நடைபெற்ற சம்பவத்தின் தீவிரம், அது ஏற்படுத்திய தேசிய மற்றும் சர்வதேச அதிர்வுகள் சம்பந்தமாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது.