ராமநாதபுரம் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலாளர் வேலுார் இப்ராஹிம், ‘முஸ்லிம்களுக்கு உண்மையான பாதுகாப்பு அளிப்பதுடன் நலத்திட்டங்களை கடந்த அரசுகளை விட இன்றைய மத்திய அரசுதான் அதிகமாக வழங்கி வருகிறது. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பிரதமர் மோடி சிறுபான்மை மக்களின் கல்வி வளர்ச்சிக்காக ரூ. 5,123 கோடி ஒதுக்கியுள்ளார். அதனால்தான் சிறுபான்மை மக்கள் தற்போது அதிகமாக பா.ஜ.க’வில் இணைந்து வருகின்றனர். வழிபாட்டு தலத்திற்கு செல்வதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் எனக்கு கொடுத்துள்ள உரிமையை கூட தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசு மறுக்கிறது. எனக்கு காவல்துறை பாதுகாப்பு அளிப்பதால் என்னை எதுவும் செய்ய முடியாது என்பதால், இக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக்கை தாக்க திட்டமிட்டுள்ளனர். அவருக்கு அளித்த பாதுகாப்பை காவல்துறை வாபஸ் பெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பயங்கரவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அப்பாவி மக்கள் மூளை சலவை செய்யப்படுகின்றனர். முஸ்லிம் இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளிக்கின்றனர்’ என்றார்.