பாரதத்திடம் கெஞ்சும் பாகிஸ்தான்

சார்க் எனப்படும் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய அமைப்பில் பாரதம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், மாலத்தீவுகள், நேபாளம், மற்றும் இலங்கை நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2014ல் நேபாளத்தில் நடைபெறவிருந்த இரு வருட உச்சி மாநாடுகள் நடைபெறவில்லை. 2016ல், உரி பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பாரதம், அதில் பங்கேற்காது என தெரிவித்தது. வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் பங்கேற்க மறுத்ததால் உச்சிமாநாடு ரத்து செய்யப்பட்டது. அப்போது முதல் சார்க் மாநாடு பயனுள்ளதாக அமையவில்லை. 2021ல் சார்க் மாநாட்டில் ஆப்கானிஸ்தானின் சார்பாக தலிபான்களை அனுமதிக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் வலியுறுத்தலை அடுத்து அந்த சார்க் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள பாரதத்தை பாகிஸ்தான் அழைத்துள்ளது. நேரில் வரமுடியாவிட்டால் இணைய வழியிலாவது பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. இதுவரை முறையான அழைப்பு எதுவும் வரவில்லை என்று பாரதம் தெரிவித்துள்ளது.