நாட்டில் உள்ள மாணவர்களுக்கு நன்கு உருவாக்கப்பட்ட கல்வி தொழில்நுட்ப தீர்வுகள், பாடப்பிரிவுகளை வழங்க, தொழில்நுட்பத்துக்கான தேசிய கல்வி கூட்டணி (நீட்) 3.0 என்ற தளத்தை, மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார். அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) மாநில மொழிகளில் தயாரித்த தொழில்நுட்பப் புத்தகங்களையும் அவர் வெளியிட்டார். அப்போது பேசுகையில், ‘பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள் இடையே நிலவும் டிஜிட்டல் இடைவெளியை போக்குவதில் நீட் தளம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும். இத்தளத்தில், 58 உலகளாவிய மற்றும் பாரத கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்து 100 பாடப் பிரிவுகளையும், மின்னணு பாடங்களையும் வழங்குகின்றன. இதன் மூலம் மாணவர்களின் கற்றல், வேலைவாய்ப்பு திறன் அதிகரிக்கும். நீட் 3.0 திட்டத்தின் கீழ், 12 லட்சத்துக்கும் அதிகமான பின்தங்கியுள்ள மாணவர்கள் ரூ. 253 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பில் இலவச தொழில்நுட்ப கல்விக்கான கூப்பன்களை பெற்றுள்ளனர். புத்தாண்டில் பிரதமரிடம் இருந்து மாணவர்கள் பெறும் மிகப் பெரிய பரிசு இது. 21ம் நூற்றாண்டில் உலகளாவிய பொருளாதாரத்தை பாரதம் வழி நடத்தும். நாட்டில் பல மொழிகள் இருப்பது நமது பலம். மாநில மொழிகளில் படிப்பது, நமது இளைஞர்களின் விவேகமான சிந்தனையை மேலும் மேம்படுத்தி அவர்களை உலகளாவிய குடிமக்களாக மாற்றும்’ என்று கூறினார்.