ஆக்ராவில் நடந்த ‘குடும்ப பிரபோதன்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே, ‘ஹிந்து’ என்ற வார்த்தை மதம் மட்டுமல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. பாரதத்தின் அடையாளம் ‘ஹிந்து’, அதன் ஆத்மாவும் ‘ஹிந்து’. ஏனெனில் பாரதத்தின் மொழியில் ‘ஹிந்து’ என்பது ஒரு வாழ்க்கை முறை. பல்வேறு வகையான கருத்துக்களையும் அரவணைத்துச் செல்வதே ஹிந்து மதத்தின் சாராம்சம்.
‘வசுதைவ குடும்பகம்’ என்பது உலக மனிதர்களை மட்டும் குடும்ப உறுப்பினர்களாகக் கருதாமல், மற்ற உயிரினங்கள், உயிரற்றவை என அனைத்தையும் கருதும் எண்ணம்தான் நமது இருப்புக்கு ஆணிவேர். சைவர்களும் வைணவர்களும் ஒரே கூரையின் கீழ் வாழும் பல குடும்பங்கள் பாரதத்தில் உள்ளன. குடும்பம் என்பது நமது தேசத்தின் மிகச்சிறிய அலகு. குடும்பத்தில் நமது சம்ஸ்காரத்தைக் கற்றுக்கொள்கிறோம், அதே சமஸ்காரங்கள் என்றென்றும் நம்மில் பதிந்திருக்கும். வசுதைவ குடும்பகம், யோகம், ஆயுர்வேதம் போன்ற கருத்துக்களை உலகுக்கு அளித்தது நமது பாரதம். பாரதிய நாகரீகம் பல ஆண்டுகளாக ஒருமைப்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி பேசி வருகிறது. நமது ரிஷி முனிவர்கள் அத்தகைய கருத்துக்களை போதித்தது மட்டுமல்லாமல் அதை வாழ்ந்தும் காட்டினர்.
இன்று, உலகம் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கருத்துக்களை ஏற்றுக்கொள்கிறது, ஒரு புதிய மனிதன் உருவாகிறான். இதுதான் ஹிந்து மதத்தின் சாராம்சம். ஒவ்வொரு மூலையிலிருந்தும் எல்லாவற்றிலும் சிறந்ததை நீங்கள் எடுத்து உங்கள் சுற்றுப்புறத்திற்கும், உங்கள் சூழலுக்கும் ஏற்றவாறு வடிவமைக்க வேண்டும். பாரதிய பாரம்பரியத்தில் முற்றுப்புள்ளி என்பதே இல்லை, அது நாளுக்கு நாள் தேவைக்கேற்ப உருவாகிக்கொண்டே இருக்கிறது. நமது கலாச்சாரத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால், அது மிகவும் ஆற்றல் வாய்ந்தது மற்றும் அனைத்தையும் அரவணைத்து செல்லும் தன்மைக் கொண்டது. உச்சநீதிமன்றம் கூட, அதன் புகழ்பெற்ற 1995 தீர்ப்பில், “ஹிந்துத்துவா என்பது ஒரு மதம் அல்ல, மாறாக அது ஒரு வாழ்க்கை முறை மற்றும் ஒரு மனநிலை” என்று கூறியது. அதை சிதைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன ஆனால் அது தழைத்து வளர்ந்து வருகிறது’ என கூறினார்.