பாரதத்தின் ஆன்மா

‘தாரா ஷிகோ இன்று ஏன் முக்கியம்: அவரது படைப்புகள் மற்றும் ஆளுமையை நினைவு கூர்தல்’ என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கை டெல்லியில் உள்ள முஸ்லிம் அலிகர் பல்கலைக்கழகம் நடத்தியது. இதில் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டு பேசுகையில், ‘பழமைவாத மற்றும் விரோத அரசியல் ‘தாரா ஷிகோ மரபு’ பற்றி தவறான கருத்தை ஏற்படுத்தியுள்ளது. மதநல்லிணக்கம், சகிப்புத்தன்மை, அனைத்து மதமும் ஒன்று என்பதுதான் பாரதத்தின் ஆன்மா. வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது நாட்டின் பலம். தனது வாழ்க்கை முழுவதும், சமூக நல்லிணக்கம் மற்றும் மத ஒற்றுமையின் சுடராக தாரா ஷிகோ விளங்கினார். ஒருபுறம் உலகின் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் பாரதத்தில் வசிக்கின்றனர். மறுபுறம் கடவுள் நம்பிக்கையற்றவர்களும் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் சம அளவிலான அரசியல்சாசன மற்றும் சமூக உரிமைகளுடன் வசிக்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமை என்ற பலம்தான், ஒரே பாரதம், உன்னத பாரதத்தை உருவாக்குகிறது. அனைத்து மத பண்டிகைகளும் கொண்டாடப்படும் ஒரே தேசம் பாரதம்தான். இந்த கலாச்சார பாரம்பரியத்தை நாம் பாதுகாக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை தகர்க்கும் எந்த முயற்சியும், பாரதத்தின் ஆன்மாவை பாதிக்கும்’ என கூறினார்.