பாகிஸ்தானில் துன்புறுத்தலுக்கு ஆளாகி பாரத்த்தில் அடைக்கலம் தேடிவந்த ஹிந்து அகதிகள், பாரத தலைநகர் டெல்லியில் பிஜ்வாசன், பதி மைன்ஸ், மஜ்னு கி தில்லா, சிக்னேச்சர் பாலம், ஆதர்ஷ் நகர், ரோகினி செக்டார் – 11 மற்றும் ரோகினி செக்டார் – 25 உள்ளிட்ட பகுதிகளில் வாழ்கின்றனர். இங்கு சுமார் 43,000 பாகிஸ்தானிய ஹிந்து அகதிகள் வசிக்கின்றனர். சேவாபாரதி அமைப்பு, இதுபோன்ற ஏழு காலனிகளில் வாழும் அவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டிற்காக பல திட்டங்களைத் தொடங்கி நடத்தி வருகிறது. டெல்லி சேவா பாரதி தன்னார்வத் தொண்டர்கள் அங்குள்ள வீடுகளுக்குச் சென்று, அவர்களின் மருத்துவப் பிரச்சனைகளை அறிந்து உதவி செய்தல், இலவச டியூஷன் நடத்துவது, ஆம்புலன்ஸ் சேவை, உணவு தானியங்களை முறையாக பெற வழிவகை செய்தல், பெண்களுக்கான தையல் மையங்கள் தொடங்குதல், ஆண்களுக்கு சொந்தத் தொழிலுக்கு உதவுதல், சுகாதாரம், குடும்பக் கட்டுப்பாடு, நிதி நிலைத்தன்மை, கல்வியின் முக்கியத்துவம் குறித்த சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என பல்வேறு சேவை பணிகளை செய்து வருகின்றனர். பல குடும்பங்கள் பாரத குடியுரிமையை பெற உரிய ஆவணங்கள் இன்றி திணறி வருகின்றன. அவர்களுக்கும் சேவாபாரதி உதவி வருகிறது. சேவாபாரதி தன்னார்வத் தொண்டர்களின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி பேசும் அப்பகுதி மக்கள் அவர்கள் மீது அன்பும் பாசமும் நம்பிக்கையும் கொண்டுள்ளனர்.