கர்மயோகி விருது 2021

மை ஹோம் இந்தியா என்ற தேசிய அரசு சாரா அமைப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களிடையே உணர்வுபூர்வமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முயல்கிறது. இந்த அமைப்பின் 2021ம் ஆண்டுக்கான 8வது சுவாமி விவேகானந்தா கர்மயோகி விருது திரிபுராவின் புகழ்பெற்ற பழங்குடி மதத் தலைவரும் சமூக ஆர்வலருமான சுவாமி சித்தரஞ்சன் டெபர்மாவுக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற விழாவில், கங்கா மகாசபையின் பொதுச்செயலாளர் சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி, கர்மயோகி விருதை சுவாமி டெபர்மாவுக்கு வழங்கி கௌரவித்தார். 1 லட்சம் ரொக்கப் பரிசை சரஸ்வத் கூட்டுறவு வங்கியின் தலைவர் கௌதம் இ தாக்கூர் வழங்கினார். “சுவாமி சித்தரஞ்சன் டெபர்மா பழங்குடியினப் பகுதி மக்களின் வாழ்க்கையை மாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். அவர் தனது வாழ்க்கையையும் சமூகத்திற்காக அர்ப்பணித்துள்ளார். மனித நேயத்திற்கான அவரது விலைமதிப்பற்ற பணி அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது. பழங்குடியினர் நலன், சமூக மேம்பாடு, கல்வி, சுகாதாரம், இயற்கை விவசாயம், தையல், திறன் மேம்பாடு ஆகியவற்றில் சுவாமி சித்தரஞ்சன் டெபர்மா மகத்தான பங்களிப்புகளைச் செய்துள்ளார். மதமாற்றத்தையும் தடுத்து வருகிறார்” என்று மை ஹோம் இந்தியா நிறுவனரும் பா.ஜ.கவின் தேசிய செயலாளருமான சுனில் தியோதர் கூறினார். மேலும் கெளதம் இ தாக்கூர், சுவாமி ஜிதேந்திரானந்த் சரஸ்வதி, டாக்டர் பகவத் கரத், பல்தேவ் சச்தேவா ஆகியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.